Friday, January 6, 2012

பசுக்களின் பெருமையை



பாரதத்தில் வேதகாலம் தொடங்கி, இன்று வரை, பசுவின் (கோமாதாவின்) பெருமையையும், அதனைப் பராமரிக்க வேண்டிய அவசியத்தையும், பசு இனத்தை வழிபாடும் முறைகளையும், தெரிவிக்காத இறை நூல்களே இல்லை எனலாம்.



பசுக்களின் பெருமையை உணர்ந்து, அவைகளை வலஞ்செய்து, துதித்து வணங்கி, புல்லுக்கொடுத்தோர் சிவலோகத்தை அடைந்து இன்புறுவர். பசுக்களைத்தீண்டினும், தீவினைகள் நீங்கி, நல்வினைகள் பெருகும். அவைகள் இம்மை மறுமை இரண்டிலும் பயனைத் தரும். பசுக்களுக்குச் சாலையை விதிப்படி செய்வித்து, ஆற்றுமண் ஓடைமண் புற்றுமண் வில்வத்தடிமண் அரசடிமண் என்பவைகளால் நிலம்படுத்து, முதிர்கன்று இளங்கன்று நோயுற்றகன்று என்னும் இவைகளுக்கு இடங்கள் வெவ்வேறாக அமைக்க, நாடோறும் கோசல கோமயங்களைப் புறத்தே நீக்கி, சுத்தி செய்க. மசகம் வராமல் தூபம் இடுக, தீபங்கள் ஏற்றுக சாலை எங்கும் பூமாலை நாற்றுக. பசுக்களை, சாலையினுள்ளே சுவத்தி என்னும் சொல்லைச் சொல்லி, மெல்ல மெல்லப் புகுவித்து, சிரத்தையோடும் புல்லைக் கொடுக்க, நோயுற்ற பசுக்களுக்கு வேறிடம் அமைத்து, மருந்து கொடுத்துப் பேணுக. அட்டமி தோறும் பசுக்களை நீராட்டி, பூச்சூட்டி, அன்னமும் ஜலமும் ஊட்டி, தூபதீபம் காட்டி வணங்குக. பசுக்களை வேனிற்காலத்திலே சோலைகளிலும், மழைக்காலத்திலே மலைச்சாரல் வனங்களிலும், பனிக்காலத்திலே வெய்யில் மிகுந்த வெளிகளிலும், இடர் உறாவண்ணம் மேய்க்க, பசுக்களை இடர் நீங்கக் காக்காதவர்களும், பூசை செய்யாதவர்களும், காக்காத பாவிகளைத் தண்டியாத அரசனும் நரகத்தில் வீழ்வர்கள். ஆவுரிஞ்சுகல் நாட்டுதலும், சிவனுக்கும் ஆசாரியருக்கும், பசுவைத் தானம் செய்தலும், குற்றமற்ற இலக்கணங்களையுடைய இடபத்தைச் சிவசந்நிதிக்குத் தானம் செய்தலும், சிவனது திருப்பணியின் பொருட்டுச் சகடத்திற்கு எருது கொடுத்தலும், இளைத்த பசுவைக் கண்டி இரங்கித் தாம் வாங்கி வளர்த்தலும், பெரும் புண்ணியங்களாம். பசுக்கள் தரும் பால் தயிர் நெய் கோசலம் கோமயம் என்னும் பஞ்சகவ்வியங்களையும் சிவனுக்கு அபிஷேகம் பண்ணுவிக்க. கன்று பால் உண்டு முலையை விடுத்தபோது, ஜலத்தினாலே முலையைக் கழுவிக் கறக்க. ஆசை மிகுதியினாலே கன்றுக்குப் பால்விடாமற் கறந்தவன் நரகத்தில் வீழ்ந்து நெடுங்காலம் வருந்தி, பின்பு பூமியிலே பிறந்து, கடும்பசியினாலே வீடுகள் தோறும் இரப்பன். கபிலையின் பாலைச் சிவனுக்கே கொடுக்க; அதனைத் தாம் பருகில் நரகத்து வீழ்வர். மலட்டுப்பழுவின் மேலேனும் இடபத்தின் மேலேனும், பாரம் ஏற்றினோரும், இடபத்தில் ஏறினோரும் நரகத்தில் வீழ்வர். பசுக்களைப் பகைவர் கவரின், எதிர்த்து காக்க; காத்தல் அரிதாயவழித் தம்முயிர் விடுத்தோர் சிவபதம் அடைவர். இதுகாறும் கூறியவற்றிற் கெல்லாம் பிரமாணம் சிவதருமோத்தரத்துக் கோபுரவியலின் இறுதியிற் காண்க.

No comments:

Adopt a Cow